லெஜண்ட் என்பதற்கு தமிழில் சமமான வார்த்தை தெரிந்தால் கூறுங்கள்.
தமிழில் லெஜண்டரி ரைட்டர் என்றால் அது பாலகுமாரன் தான். அவருடனான பரிச்சயம் எனக்கு ஏற்பட்டது 12 வயதில். எங்கள் குடும்பத்தில் இருவர் காதலிக்க, அதை வீட்டு பெரியவர்கள் எதிர்க்க, அந்த பையன் பேசிய வார்த்தைகளில்தான் நான் முதன் முதலில் அந்தப் பெயரைக் கேட்டது. அவன் சொன்னது -
“ பாக்கறது பாலசந்தர் படம், படிக்கறது பாலகுமாரன் கதை, ஆனா வீட்டுல யாராவது காதல்னு சொன்னா ச்சீ! த்தூ!ங்க வேண்டியது! ப்ளடி ஹிப்போக்ரட்ஸ்!”
“ பாலசந்தர் தெரியும், அது யாரு பாலகுமாரன்?” , நான் சகோதரியைக் கேட்க,
“ ரைட்டர். இரும்பு குதிரைகள் எழுதினவர்.”
“ ஓ?” என்றுவிட்டு மீண்டும் எனிட் ப்ளைட்டனில் மூழ்கிப் போனேன்.
ஒன்பதாம் க்ளாஸ் லீவில், ரோட்டில் கரண்ட் விளையாடுவதில் மரத்தில், காம்பௌண்ட் சுவரில் ஏறுவதிலெல்லாம் தயக்கம் ஏற்பட்டு கொஞ்சம் வீட்டில் முடங்க ஆரம்பித்த போது பொன்னியின் செல்வன், சுஜாதா என்று மேய ஆரம்பித்தேன். யாரோ லைப்ரரியிலிருந்து இரும்பு குதிரைகள் எடுத்து வர, ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்து அந்தக் கதையை ஜீரனிக்க முடியாது பாலகுமாரனைத் தவிர்க்க ஆரம்பித்தேன்.
பள்ளியிலிருந்து வீட்டிற்கு நடந்து வரும்போது ‘ சுஜாதா பெரிய ரைட்டரா, பாலகுமாரன் பெரிய ரைட்டரா?’ விவாதத்தின் போதெல்லாம் என் வோட்டு சுஜாதாவிற்குதான். அந்த வயதில் பாலகுமாரன் எழுத்து புரிந்து சிலாகிக்ககூடிய புத்திசாலிகள் என் வகுப்பில் எனக்குத் தெரிந்து இருவர் மட்டுமே. மற்றவர்களெல்லோரும் என் போலத்தான். நாங்கள் செட்டு சேர்ந்தால், பத்தாவது லீவில் கூட சொப்பு வைத்து விளையாடுவோம்.
அவர்களில் இருவர் திருச்சி தாயுமானவர் ஸ்டோர் குடித்தனத்தில் வாழ்ந்தவர்கள். ஒருத்தியின் அப்பா ரசிக ரஞ்சன சபா ட்ராமா ஆர்வலர். அவர்கள் வீட்டில் பாலகுமாரன் சில நாட்கள் தங்கினார். ஒரு நாவலுக்காக ஸ்டோர் குடித்தன வாழ்க்கை பற்றி தெரிந்துகொள்ள வந்திருப்பதாகச் சொன்னார்கள். இன்னொருத்தி , என்னோடு சொப்பு வைத்து விளையாடிய தோழி, அவரிடம் தைரியமாக , “ உங்க இரும்பு குதிரைகள் படிச்சேன். எனக்குப் பிடிக்கல “ என்று சொல்ல, அவர் பொறுமையாக , “ அது புரியற அளவுக்கு உனக்கு இன்னும் வயசாகல” என்றாராம்.
கொஞ்சம் வளர்ந்ததற்கப்புறம் ‘ குணா ‘ பார்த்தபோது, அதற்கு வசனம் பாலகுமாரன் என்று அறிந்தபோது அவர் மீது மரியாதை ஏற்பட்டது. ஆனாலும் அவர் புத்தகங்கள் தேடிப் படிக்கவில்லை.
சில வருடங்கள் போன பின், வாழ்வின் பாதுகாப்பு ஆட்டம் கண்டு, வாழ்க்கை என்னை அம்மியில் தேய்த்து, உரலில் இடித்து, துவைக்கும் கல்லில் கும்மி எடுக்க, எத்தைத் தின்றால் பித்தம் தணியும் என்கிற நிலை ஏற்பட்ட போது மீண்டும் பாலகுமரன் படிக்க நேர்ந்தது. புரிய ஆரம்பித்தது, இரும்பு குதிரைகள் உட்பட.
இன்று என்னிடம் உள்ள புத்தகங்களில் 95% மேல் பாலகுமாரனுடையவை. அவரது ‘தலையணைப் பூக்கள்’ , ‘தாயுமானவன்’ , ‘என்றென்றும் அன்புடன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’, ‘முன்கதை சுருக்கம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?’ போன்றவற்றில் பல பகுதிகள் கிட்டத்தட்ட மனப்பாடம்.
இஞ்சினியரிங் மாணவனான என் அக்கா பிள்ளையிடம் பேசிக் கொண்டிருந்த போது, "படிக்கற வயசுல சயின்ஸ் பிரமிப்பு அடங்கற வரைக்கும் சுஜாதா. பொறுப்புகள் ஏற்கத் தொடங்கினப்றம் பாலகுமாரன் இஸ் மோர் ரெலவண்ட் அண்ட் யூஸ்ஃபுல். ” என்று கருத்து சொல்ல, அதைக் கேள்விப்பட்ட அவன் சக மாணவர்கள் , “ உங்க சித்தியோட கொடும்பாவிய எரிக்கணும்டா!” என்றார்களாம். அப்படித்தான் பேசுவார்கள், குழந்தைகள். நானும் பேசியிருக்கிறேன்.
சுஜாதாவின் பங்களிப்புக்கு நாம் எல்லோரும் கடமைப் பட்டவர்களே. கம்ப்யூட்டரைத் தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தி விளக்கிப் புரியவைத்தவர். அறிவியலில் அவரது “ ஏன்? எதற்கு? எப்படி?” தொடர் கூகுள் ஸர்ச்சைவிட நம்பகமானது. இண்டர்னெட் சௌகர்யம் இல்லாத காலத்தில் அப்படி ஒன்றை அவர் எழுத வேண்டும் என்றால் அவர் அறிவியல் அறிவு எத்தனை பரந்ததாக இருந்திருக்க வேண்டும்? புரிதல் எத்தனை ஆழமாக இருந்திருக்கவேண்டும்? அற்புதமான நகைச்சுவையும் துரிதமான நடையுமாக அவர் நாவல்கள் படிக்க ஆரம்பித்துவிட்டால் கீழே வைக்கமுடியாது. பாலகுமாரன் தனக்குச் சிறுகதை எழுதும் சூட்சுமம் கற்றுக் கொடுத்தது சுஜாதா என்று பல இடங்களில் சொல்லி இருக்கிறார். வித் ட்யூ ரெஸ்பெக்ட் டு ஹிம், சொல்கிறேன் அறிவியல் புரிய சுஜாதா, வாழ்க்கை புரிய, குடும்பம், உறவுகள் புரிய, அதன் நெளிவு சுளிவு அறிய பாலகுமாரன்.